ஏவுகணை - EAVUKANAI

Saturday, September 25, 2010

Indian Politics: எருமைகள் ஓட்டும் ஏரோப்பிளேன்

                                                   "கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமைகூட ஏரோப்பிளேன் ஓட்டும்" இது கிராமங்களில் வழங்கும் சொலவடை. ஆனால் இந்திய ஜனநாயகத்தில் உண்மையில் எருமைகள்தான் ஏரோப்பிளேன் ஓட்டுகின்றன. எப்படி என்கிறீர்களா?
                                                      ப்யூன் வேலையிலிருந்து இந்தியன் அல்வா சர்வீஸ்வரை ( அதாங்க I.A.S) வேலையில் சேரவேண்டுமானால் வேலைக்குத் தகுந்தபடி ஒரு படிப்பு படித்திருக்க வேண்டும். சர்வீஸ் கமிஷன் தேர்வு, இண்டர்வியூ என்று ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ். இந்தத் தகுதியெல்லாம்போக இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு ரேட் என்பது சாதாரண பிரஜைக்கும்கூட தெரியும்.
                                                        ஆனால் இவர்களுக்கு கட்டளையிடுவதோடு நமது தலையெழுத்தையே நிர்ணயிக்கிற அரசியல்வாதிகளுக்கு எந்தத் தகுதியுமே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் எந்தவித அரசாங்க வேலைக்கும் தகுதியற்றவர்கள். படிப்புத் தகுதியற்றவர்கள் தவிர பெரும்பாலானோர் குற்றப்பின்னணி உடையவர்கள். கிரிமினல்களை அரசியலிலிருந்து அகற்றவேண்டும் என்ற கோஷம் அவ்வப்போது எழுந்து அதேவேகத்தில் அடங்கிவிடும்.
                          இதுபோன்ற கல்வித்தகுதி இல்லாதவர்களும், கிரிமினல் பின்னணி கொண்டவர்களும்தான் நமது தலைவர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக இருந்து நாட்டின் பாதுகாப்பிலிருந்து குப்பை அள்ளும் முனிசிபாலிட்டி வேலைவரை செய்கிறார்கள்; பாலிசி டிசிஷன் எடுக்கிறார்கள்; சட்டத்தை உருவாக்குகிறார்கள்; நீதிபதிகளை நியமிக்கிறார்கள்; வரி போடுகிறார்கள்; நமது வரிப்பணத்தில் முட்டாள்தனமாக வாணவேடிக்கைகள் நடத்தி நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறார்கள்; இலவசம் என்ற பெயரில் மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி சுயகௌரவத்தை முடக்கிப் போடுகிறார்கள்; இவர்களும் இவர்கள் குடும்பமும் நாட்டையே வேட்டைக் காடாக்கி செல்வத்தை அள்ளிக் குவிக்கின்றன.
                                    எட்டாங்கிளாஸ் பெயிலானால் ஒரு பியூன் வேலைகூட கிடைக்காது. ஆனால் அரசியலில் தலைமைப் பதவி கிடைக்கும். திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள் பாடம் நடத்தி, தேர்வு வைத்து கொடுத்த பட்டங்கள் செல்லாது. ஆனால் அடிப்படை கல்வித்தகுதியே இல்லாத அரசியல்வாதிகளுக்கு மிகச் சுலபமாக டாக்டர் பட்டம் கிடைக்கும்.

                                                                இப்போது சொல்லுங்கள்! எருமைகள் ஓட்டும் ஏரோப்பிளேனில்தானே நமது பயணம் நடக்கிறது?
   
      

Thursday, September 23, 2010

காமன் வெல்த்தா? கல்மாடி வெல்த்தா?

               பசித்த வயிறுகள் கூழுக்கு ஏங்கி நிற்கையில் படாடோப அரசியல்வாதிகள் வாண வேடிக்கை நடத்துகிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம், ஊழல் இவை போட்டியே இல்லாமல் வெற்றிக் கம்பத்தை நிரந்தரமாகப் பற்றிக் கொண்டு கும்மாளம் போடும்போது காமன்வெல்த் போட்டிகள் என்ற வாணவேடிக்கையை ஆரம்பித்து உலக நாடுகள் மத்தியில் கரிபூசிக் கொண்டு நிற்கிறது இந்தியா. விலைவாசி உயர்வுபற்றி கேள்வி கேட்டால் "வெயிட் அண்ட் சீ" என்று இந்திய கோவணாண்டிகளுக்கு 'இண்டலட்சு'வல் பதில் கொடுத்த சிதம்பரங்களும் மன்மோகன்களும் உலகநாடுகள் முன்னால் சாயம் வெளுத்துப்போய் பல்லிளிக்கிறார்கள்.
                                                         இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சுகாதார ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கூறி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தியா வர தயக்கம் காட்டியிருக்கிறார்கள். இது தொடர்பான இந்தியாவின் விளக்கம் நம்பத்தகுந்ததல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.




                         அவர்கள் சந்தேகம் சரியானது என்பதற்கு ஆதாரமாக ஸ்டேடியத்தில் கட்டப்பட்ட நடைமேடையும், தற்காலிகக் கூரையும் அடுத்தடுத்து இடிந்துவிழுந்து இந்தியத் தரப்பை கோமாளிகளாக வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இனி T.V யிலும் பத்திரிக்கையிலும் இவர்கள் அளக்கும் பொய்யை வெளிநாட்டில் இருக்கும் நாய்கூட நம்பப்போவதில்லை. ஆனால் நமது தலையெழுத்து இவர்களை நமது தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
                       காமன்வெல்த் என்பதை கல்மாடி வெல்த் என்று சுரேஷ் கல்மாடி தவறாகப் புரிந்து கொண்டதுதான் இந்த தலைகுனிவுக்குக் காரணம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் என்று எத்தனை கூக்குரல் ஒலித்தாலும், ஊழல் முடை நாற்றத்தில் இந்தியாவே மூழ்கினாலும், வெளிநாடுகளில் இருந்து எத்தனை செருப்படி விழுந்தாலும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் அவர்களுக்கு சப்பைக்கட்டு கட்டும் அரசியல் விபச்சாரிகளுக்கும் வெட்கம், மானம், ரோஷம் எதுவும் வரபோவதில்லை. இவை எல்லாவற்றையும் தலைமுழுகிவிட்டுத்தான் இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
                                          அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
                                            ஆனால் மக்களுக்கு?

Monday, September 6, 2010

அன்புடையீர்!
                            வணக்கம். உங்கள்முன் விரியும் ஏவுகணை தன் இலக்கு நோக்கி பாயப்போகிறது. இலக்கு என்ன?

                         ஏகப்பட்ட கல்வி வள்ளல்கள் எந்தவித அரசு அங்கீகாரமும் இல்லாமல் மாரீச மானாய் அவதாரம் எடுத்து அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

                                     தனியார் நிதி நிறுவனங்கள், சீட்டுக் கம்பெனிகள், தனியார் வங்கிகள் சொப்பன சுந்தரிகளாய் மினுக்கிக் காட்டி அப்பாவி பொதுஜனங்களின் அரைவயிற்றுக் கஞ்சிக்கும்கூட வேட்டு வைக்கின்றன.

                                                  பங்குச் சந்தை என்ற மின்மினிப் பூச்சிகள் குருவியாய்ச் சேர்த்த பணத்திற்கு நாமம் போட்டு "சத்யம்" பேசிக்கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளுக்கு சாமரம் வீசி அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் "இண்டலட்சுவல்" மந்திரிகளின் வாய் ஜாலத்தில் மயங்கி விடியல் வரும் என்று நடுத்தர வர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது.

                                                    அவிழ்த்துப் போடுவதற்கு ஆடைகளே இல்லாமல் கூத்தடிக்கும் மேட்டுக்குடி மக்களின் காஸ்ட்லியான வெட்கங்கெட்ட பொழுதுபோக்கு இலவசப் படுத்தப்பட்டு நமது அனுமதியில்லாமல் நமது வீட்டுக்குள்ளேயே நுழைந்து நமது குழந்தைகளின் மனதைக் கெடுத்து கலாச்சார சீரழிவுகளுக்கு கிரியா ஊக்கிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

                                                இலவசம் என்ற பெயரில் நமது ஏமாளித்தனத்தை ஓட்டுகளாக அள்ளிக் கொண்டு தனது பரம்பரையையே அதிகார போதையில் மஞ்சள் குளிக்க வைத்திருக்கின்றனர் அரசியல்வாதிகள்.

                                                                50 லட்சமும் 1 கோடியும் கொடுத்து படிப்பை முடித்துவிட்டு வரும் டாக்டர் கிராமப்புரத்தில் வேலை செய்வார் என்றும் சமுதாய சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்றும் அப்பிராணியாய் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அரையாடைப் பக்கிரிகள்.

                                                 நீதிமானாய், தர்மவானாய், நாட்டின் எதிர்காலமாய் ஃப்ளக்ஸ் போர்டுகளில் சிரிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் "கிரிமிலேயர்" சிபாரிசுக்கு அர்த்தம்கூட தேடவில்லை. ரிசர்வேஷன் என்ற பெயரில் தனக்காகவும் தனது வாரிசுகளுக்காகவும் கல்வியையும் வேலைவாய்ப்பையும் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து பரம்பரைத் தர்மகர்த்தாக்களாகிவிட்டனர். ரிசர்வேஷன் கிருஷ்ணபரமாத்மாவுக்காக அடித்தட்டு குசேலர்கள் அவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் இந்த இலவு காத்த கிளிகள்.

                                                             இந்த சமுதாய அவலங்களுக்கு யார் காரணம்? அரசியல், அதிகாரம், பணம் இவை மூன்றையும் கையில் வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கம் ஒரு பக்கம்! இவர்களுக்கு அயோக்கியத்தனமும், மோசடியும், ஏமாற்று வேலையும்தான் அடிப்படை. இவர்களுடைய அத்தனை பித்தலாட்டங்களுக்கும் சட்டமும் நிர்வாகமும் சலாம் போடுகின்றன. 70 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தால் போட்டோபிடித்து லாக்கப்பில் போட்டு தண்டனை வாங்கித் தந்ததாய் "போஸ்" கொடுத்து மார்தட்டிக் கொள்ளும் சட்டமும் நிர்வாகமும் 7000 கோடி "சத்யத்"தை ஒரு நாள் தலைப்புச் செய்தியாக மட்டுமே பார்க்கிறது. ஹர்ஷத் மேத்தா என்றால் யார் என்று இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?

                                                               பத்திரிக்கையில் வரும் செய்தியையும் டி.வியில்  வரும் கிளிப்பிங்ஸையும் பார்த்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்வதாக டீக்கடையிலும் பெட்டிக் கடையிலும் அரசியல் பேசிவிட்டுக் கலைந்து செல்லும் அப்பாவி பொதுஜனம் மறுபக்கம்! சட்டம் என்ற வலையை வலிமையுடைய இந்த சுறாக்கள் அறுத்துப் போட்டுவிட்டு தப்பிச் சென்று விடுகின்றன.

                                                                      நடிகையின் பாவாடை நெகிழ்ந்ததையும், இயக்குநருக்கு பளார் விட்டதையும், கள்ளக்காதல் ஜோடிகளின் சல்லாப லீலைகளையும் மட்டும் படித்துவிட்டு, வக்கிரம் பிடித்த நாலாந்தரத் தொடர்களையும், ஆடையவிழ்ப்பு அலங்கோலக் கூத்துகளையும் டி.வியில் ரசித்துவிட்டு, டாஸ்மாக் பாரில் தண்ணியடித்துவிட்டு, இலவசம் என்ற பெயரில் தமது சுய கௌரவத்தை அடகு வைத்துவிட்டு யதார்த்த உலகை மறந்து போய் கற்பனாவாத உலகில் சஞ்சரிக்கும் ஒரு சமுதாயம் வளர்ந்து நிற்கிறது.

                                                                    சமுதாயத்தில் நிகழும் இந்த அனைத்து அயோக்கியத்தனங்களுக்கும் ஒரு அடிப்படைத்தன்மை உண்டு. எந்த அயோக்கியத்தனங்களுக்கும் அதனால் ஏற்பட்ட சமுதாயப் பாதிப்புகளுக்கும் யாரும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற அலட்சியத் தன்மையே அது. ஒரு செயலைச் செய்ததனாலோ அல்லது செய்ய மறுத்ததாலோ ஏற்பட்ட விளைவுகளுக்கு அதற்குக் காரணமான அதிகார வர்க்கம் பதில் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தவறுகள் பெருமளவு குறையக்கூடும். ஏனெனில் அரசியல்வாதிகள் செய்யும் அனைத்துத் தவறுகளும் அதிகாரிகள் மூலமே அரங்கேறுகின்றன. தவறு கண்டவிடத்து அதனைத் தட்டிக் கேட்கும் தைரியமும் எண்ணமும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வர வேண்டும்.

                                                                      முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தன்னுடைய அக்னிச் சிறகுகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுவார்: " நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை."

                                         அந்தவகையில் அநீதியையும், அயோக்கியத்தனங்களையும், முறைகேடுகளையும் இலக்காகக் கொண்டு சீறிப்பாயப்போகும் ஏவுகணை இந்த அயோக்கியத்தனங்களுக்குக் காரணமான சமுதாய சாதகங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் களையப் பாடுபடும்.

                                                                                   அறிவுஜீவிகளுக்கும் சமுதாய ஆர்வலர்களுக்கும் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினருக்கும் ஆத்மார்த்த நண்பனாய் வலம் வரப்போகும் ஏவுகணை இலக்கு நோக்கிய தனது பயணத்தில் உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறது. இந்த சமுதாய வளர்சிதை மாற்றத்தில் எங்களுடன் பங்குகொண்டு எங்களுடன் ஒன்றுபட அல்லது முரண்பட தங்களை அழைக்கிறோம்.

என்றென்றும் அன்புடன்,
       ஏவுகணை.

 புத்தக வடிவில் படிக்க: ஏவுகணை மே மாத இதழ்                                 
Site Meter