ஏவுகணை - EAVUKANAI

Saturday, September 25, 2010

Indian Politics: எருமைகள் ஓட்டும் ஏரோப்பிளேன்

                                                   "கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமைகூட ஏரோப்பிளேன் ஓட்டும்" இது கிராமங்களில் வழங்கும் சொலவடை. ஆனால் இந்திய ஜனநாயகத்தில் உண்மையில் எருமைகள்தான் ஏரோப்பிளேன் ஓட்டுகின்றன. எப்படி என்கிறீர்களா?
                                                      ப்யூன் வேலையிலிருந்து இந்தியன் அல்வா சர்வீஸ்வரை ( அதாங்க I.A.S) வேலையில் சேரவேண்டுமானால் வேலைக்குத் தகுந்தபடி ஒரு படிப்பு படித்திருக்க வேண்டும். சர்வீஸ் கமிஷன் தேர்வு, இண்டர்வியூ என்று ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ். இந்தத் தகுதியெல்லாம்போக இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு ரேட் என்பது சாதாரண பிரஜைக்கும்கூட தெரியும்.
                                                        ஆனால் இவர்களுக்கு கட்டளையிடுவதோடு நமது தலையெழுத்தையே நிர்ணயிக்கிற அரசியல்வாதிகளுக்கு எந்தத் தகுதியுமே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் எந்தவித அரசாங்க வேலைக்கும் தகுதியற்றவர்கள். படிப்புத் தகுதியற்றவர்கள் தவிர பெரும்பாலானோர் குற்றப்பின்னணி உடையவர்கள். கிரிமினல்களை அரசியலிலிருந்து அகற்றவேண்டும் என்ற கோஷம் அவ்வப்போது எழுந்து அதேவேகத்தில் அடங்கிவிடும்.
                          இதுபோன்ற கல்வித்தகுதி இல்லாதவர்களும், கிரிமினல் பின்னணி கொண்டவர்களும்தான் நமது தலைவர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக இருந்து நாட்டின் பாதுகாப்பிலிருந்து குப்பை அள்ளும் முனிசிபாலிட்டி வேலைவரை செய்கிறார்கள்; பாலிசி டிசிஷன் எடுக்கிறார்கள்; சட்டத்தை உருவாக்குகிறார்கள்; நீதிபதிகளை நியமிக்கிறார்கள்; வரி போடுகிறார்கள்; நமது வரிப்பணத்தில் முட்டாள்தனமாக வாணவேடிக்கைகள் நடத்தி நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறார்கள்; இலவசம் என்ற பெயரில் மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி சுயகௌரவத்தை முடக்கிப் போடுகிறார்கள்; இவர்களும் இவர்கள் குடும்பமும் நாட்டையே வேட்டைக் காடாக்கி செல்வத்தை அள்ளிக் குவிக்கின்றன.
                                    எட்டாங்கிளாஸ் பெயிலானால் ஒரு பியூன் வேலைகூட கிடைக்காது. ஆனால் அரசியலில் தலைமைப் பதவி கிடைக்கும். திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள் பாடம் நடத்தி, தேர்வு வைத்து கொடுத்த பட்டங்கள் செல்லாது. ஆனால் அடிப்படை கல்வித்தகுதியே இல்லாத அரசியல்வாதிகளுக்கு மிகச் சுலபமாக டாக்டர் பட்டம் கிடைக்கும்.

                                                                இப்போது சொல்லுங்கள்! எருமைகள் ஓட்டும் ஏரோப்பிளேனில்தானே நமது பயணம் நடக்கிறது?
   
      

No comments:

Post a Comment

Site Meter