ஏவுகணை - EAVUKANAI

Monday, September 6, 2010

அன்புடையீர்!
                            வணக்கம். உங்கள்முன் விரியும் ஏவுகணை தன் இலக்கு நோக்கி பாயப்போகிறது. இலக்கு என்ன?

                         ஏகப்பட்ட கல்வி வள்ளல்கள் எந்தவித அரசு அங்கீகாரமும் இல்லாமல் மாரீச மானாய் அவதாரம் எடுத்து அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

                                     தனியார் நிதி நிறுவனங்கள், சீட்டுக் கம்பெனிகள், தனியார் வங்கிகள் சொப்பன சுந்தரிகளாய் மினுக்கிக் காட்டி அப்பாவி பொதுஜனங்களின் அரைவயிற்றுக் கஞ்சிக்கும்கூட வேட்டு வைக்கின்றன.

                                                  பங்குச் சந்தை என்ற மின்மினிப் பூச்சிகள் குருவியாய்ச் சேர்த்த பணத்திற்கு நாமம் போட்டு "சத்யம்" பேசிக்கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளுக்கு சாமரம் வீசி அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் "இண்டலட்சுவல்" மந்திரிகளின் வாய் ஜாலத்தில் மயங்கி விடியல் வரும் என்று நடுத்தர வர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது.

                                                    அவிழ்த்துப் போடுவதற்கு ஆடைகளே இல்லாமல் கூத்தடிக்கும் மேட்டுக்குடி மக்களின் காஸ்ட்லியான வெட்கங்கெட்ட பொழுதுபோக்கு இலவசப் படுத்தப்பட்டு நமது அனுமதியில்லாமல் நமது வீட்டுக்குள்ளேயே நுழைந்து நமது குழந்தைகளின் மனதைக் கெடுத்து கலாச்சார சீரழிவுகளுக்கு கிரியா ஊக்கிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

                                                இலவசம் என்ற பெயரில் நமது ஏமாளித்தனத்தை ஓட்டுகளாக அள்ளிக் கொண்டு தனது பரம்பரையையே அதிகார போதையில் மஞ்சள் குளிக்க வைத்திருக்கின்றனர் அரசியல்வாதிகள்.

                                                                50 லட்சமும் 1 கோடியும் கொடுத்து படிப்பை முடித்துவிட்டு வரும் டாக்டர் கிராமப்புரத்தில் வேலை செய்வார் என்றும் சமுதாய சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்றும் அப்பிராணியாய் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அரையாடைப் பக்கிரிகள்.

                                                 நீதிமானாய், தர்மவானாய், நாட்டின் எதிர்காலமாய் ஃப்ளக்ஸ் போர்டுகளில் சிரிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் "கிரிமிலேயர்" சிபாரிசுக்கு அர்த்தம்கூட தேடவில்லை. ரிசர்வேஷன் என்ற பெயரில் தனக்காகவும் தனது வாரிசுகளுக்காகவும் கல்வியையும் வேலைவாய்ப்பையும் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து பரம்பரைத் தர்மகர்த்தாக்களாகிவிட்டனர். ரிசர்வேஷன் கிருஷ்ணபரமாத்மாவுக்காக அடித்தட்டு குசேலர்கள் அவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் இந்த இலவு காத்த கிளிகள்.

                                                             இந்த சமுதாய அவலங்களுக்கு யார் காரணம்? அரசியல், அதிகாரம், பணம் இவை மூன்றையும் கையில் வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கம் ஒரு பக்கம்! இவர்களுக்கு அயோக்கியத்தனமும், மோசடியும், ஏமாற்று வேலையும்தான் அடிப்படை. இவர்களுடைய அத்தனை பித்தலாட்டங்களுக்கும் சட்டமும் நிர்வாகமும் சலாம் போடுகின்றன. 70 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தால் போட்டோபிடித்து லாக்கப்பில் போட்டு தண்டனை வாங்கித் தந்ததாய் "போஸ்" கொடுத்து மார்தட்டிக் கொள்ளும் சட்டமும் நிர்வாகமும் 7000 கோடி "சத்யத்"தை ஒரு நாள் தலைப்புச் செய்தியாக மட்டுமே பார்க்கிறது. ஹர்ஷத் மேத்தா என்றால் யார் என்று இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?

                                                               பத்திரிக்கையில் வரும் செய்தியையும் டி.வியில்  வரும் கிளிப்பிங்ஸையும் பார்த்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்வதாக டீக்கடையிலும் பெட்டிக் கடையிலும் அரசியல் பேசிவிட்டுக் கலைந்து செல்லும் அப்பாவி பொதுஜனம் மறுபக்கம்! சட்டம் என்ற வலையை வலிமையுடைய இந்த சுறாக்கள் அறுத்துப் போட்டுவிட்டு தப்பிச் சென்று விடுகின்றன.

                                                                      நடிகையின் பாவாடை நெகிழ்ந்ததையும், இயக்குநருக்கு பளார் விட்டதையும், கள்ளக்காதல் ஜோடிகளின் சல்லாப லீலைகளையும் மட்டும் படித்துவிட்டு, வக்கிரம் பிடித்த நாலாந்தரத் தொடர்களையும், ஆடையவிழ்ப்பு அலங்கோலக் கூத்துகளையும் டி.வியில் ரசித்துவிட்டு, டாஸ்மாக் பாரில் தண்ணியடித்துவிட்டு, இலவசம் என்ற பெயரில் தமது சுய கௌரவத்தை அடகு வைத்துவிட்டு யதார்த்த உலகை மறந்து போய் கற்பனாவாத உலகில் சஞ்சரிக்கும் ஒரு சமுதாயம் வளர்ந்து நிற்கிறது.

                                                                    சமுதாயத்தில் நிகழும் இந்த அனைத்து அயோக்கியத்தனங்களுக்கும் ஒரு அடிப்படைத்தன்மை உண்டு. எந்த அயோக்கியத்தனங்களுக்கும் அதனால் ஏற்பட்ட சமுதாயப் பாதிப்புகளுக்கும் யாரும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற அலட்சியத் தன்மையே அது. ஒரு செயலைச் செய்ததனாலோ அல்லது செய்ய மறுத்ததாலோ ஏற்பட்ட விளைவுகளுக்கு அதற்குக் காரணமான அதிகார வர்க்கம் பதில் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தவறுகள் பெருமளவு குறையக்கூடும். ஏனெனில் அரசியல்வாதிகள் செய்யும் அனைத்துத் தவறுகளும் அதிகாரிகள் மூலமே அரங்கேறுகின்றன. தவறு கண்டவிடத்து அதனைத் தட்டிக் கேட்கும் தைரியமும் எண்ணமும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வர வேண்டும்.

                                                                      முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தன்னுடைய அக்னிச் சிறகுகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுவார்: " நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை."

                                         அந்தவகையில் அநீதியையும், அயோக்கியத்தனங்களையும், முறைகேடுகளையும் இலக்காகக் கொண்டு சீறிப்பாயப்போகும் ஏவுகணை இந்த அயோக்கியத்தனங்களுக்குக் காரணமான சமுதாய சாதகங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் களையப் பாடுபடும்.

                                                                                   அறிவுஜீவிகளுக்கும் சமுதாய ஆர்வலர்களுக்கும் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினருக்கும் ஆத்மார்த்த நண்பனாய் வலம் வரப்போகும் ஏவுகணை இலக்கு நோக்கிய தனது பயணத்தில் உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறது. இந்த சமுதாய வளர்சிதை மாற்றத்தில் எங்களுடன் பங்குகொண்டு எங்களுடன் ஒன்றுபட அல்லது முரண்பட தங்களை அழைக்கிறோம்.

என்றென்றும் அன்புடன்,
       ஏவுகணை.

 புத்தக வடிவில் படிக்க: ஏவுகணை மே மாத இதழ்                                 

1 comment:

Site Meter